கொரோனா ஊரடங்கு தளர்வு எதிரொலி கொடைக்கானலில் இன்று முதல் பூங்காக்கள் திறப்பு

கொரோனா ஊரடங்கு தளர்வு எதிரொலியாக கொடைக்கானலில் இன்று முதல் பூங்காக்கள் திறக்கப்படுகிறது.

Update: 2021-07-04 15:45 GMT

கொடைக்கானல்:
கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கொடைக்கானல் நகரில் உள்ள சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதை முன்னிட்டு கொடைக்கானல் நகருக்கு இன்று(திங்கட்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் இன்றி வருகை தர அரசு அனுமதித்துள்ளது. இதனால் இன்று  முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் இருக்கும். இதை  முன்னிட்டு கொடைக்கானலில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவை இன்று காலை 9 மணி முதல் திறக்கப்பட உள்ளன. 
இதன் காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு கடைகள் திறக்கப்பட உள்ளன. மேலும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளதால் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், வழிகாட்டிகள், குதிரை ஓட்டுனர்கள்,  சைக்கிள் கடை வைத்துள்ளவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை உடனடியாக திறக்க வேண்டும் எனவும், கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரியை உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்