நிலக்கோட்டை அருகே ஆசிரமத்தில் புலித்தோல் பறிமுதல்

நிலக்கோட்டை அருகே உள்ள ஆசிரமத்தில் புலித்தோல் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-07-04 15:50 GMT
நிலக்கோட்டை :
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ஒரு ஆசிரமத்தில் புலித்தோல் பதுக்கி வைத்து இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வத்தலக்குண்டு வனச்சரக அதிகாரி ஆறுமுகம் தலைமையில் அதிகாரிகள் நேற்று அந்த ஆசிரமத்திற்கு சென்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை துருவித்துருவி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரமத்துக்குள் இருந்த வீட்டின் பீரோவின் மேல் புலித்தோல், புள்ளிமான் தோல், மயில் தோகைகள் மற்றும் கருங்காலிக்கட்டைகள் இருந்தது. இதையடுத்து அவை அனைத்தையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 
 இதுகுறித்து வனத்துறையினர் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஊழியரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர், நான் ஆசிரமத்தில் உதவியாளராகத்தான் இருக்கிறேன். புலித்தோல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி சாமியாரின் செல்போன் நம்பரை வனத்துறையினரிடம் கொடுத்தார். இதையடுத்து வனத்துறையினர் அந்த செல்போன் எண்ணில் சாமியாரை தொடர்பு கொண்டனர். அப்போது, சாமியார் நேரில் சந்திக்க வருகிறேன் என்று கூறி விட்டு அதன்பிறகு  ஆசிரமத்துக்கு வரவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, பறிமுதல் செய்யப்பட்ட புலித்தோல், மான்தோல் ஆகியவை உண்மையானதுதானா என கண்டறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  உத்தரவிடப்பட்டு உள்ளது. அவை உண்மை என தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது  தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

மேலும் செய்திகள்