கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி

கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி

Update: 2021-07-04 16:17 GMT
திருப்பூர், ஜூலை.5-
கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் திருப்பூரில் கோவில்களில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்தது.
கோவில்கள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் அதிகரித்தது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்த ஊரடங்கின் போது பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்தது.
இதில் பொது போக்குவரத்து முடக்கம், கோவில்கள் செயல்பட அனுமதி ரத்து, தியேட்டர்கள் இயங்க அனுமதி ரத்து என்பது உள்பட ஏராளமான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
சுத்தம் செய்யும் பணி தீவிரம்
கொரோனா தொற்று தற்போது அனைத்து மாவட்டங்களிலும் குறைந்துள்ளது. இதற்கிடையே தமிழக அரசு ஊரடங்கை வருகிற 12-ந் தேதி வரை நீட்டித்துள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கு நீட்டிப்பின் போது ஏராளமான தளர்வுகளை வழங்கியுள்ளது. பஸ்களும் இன்று (திங்கட்கிழமை) முதல் திருப்பூரில் இருந்து இயக்கப்பட இருக்கின்றன.
இதுபோல் அனைத்து வழிபாட்டு தலங்கள் நிலையான அரசு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. பக்தர்களுக்கு கோவில்களில் சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் நேற்று திருப்பூரில் உள்ள ஈஸ்வரன் கோவில் உள்பட பல கோவில்களில் சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்றது. இன்று முதல் பக்தர்கள் கோவில்களில் அனுமதிக்கப்படுவதால் அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகிறார்கள். மேலும், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களிலும் முன்னேற்பாடுகள் நடந்தது.

மேலும் செய்திகள்