மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி வடபழனி போலீசில் 3 பேர் புகார்

மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த நபர் மீது வடபழனி போலீசில் 3 பேர் புகார் அளித்து உள்ளனர்.

Update: 2021-07-06 03:10 GMT
பூந்தமல்லி,

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், தேவபண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினகுமாரி (வயது 34). இவர், கள்ளக்குறிச்சியில் உள்ள வருமான வரி கணக்கர் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக உள்ளார்.

அதே அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி நத்தம் பகுதியை சேர்ந்த சின்னையா (47), கள்ளக்குறிச்சி ராதாநல்லூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (34) ஆகியோர் டிரைவராக வேலை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு முருகன் என்பவர் அறிமுகம் ஆனார். அவர், வக்கீலான தனக்கு மின்சார துறை அமைச்சரை நன்றாக தெரியும். அவர் மூலம் 3 பேருக்கும் மின்சார வாரியத்தில் அரசு வேலை பெற்று தருகிறேன். அதற்கு 3 பேரும் தலா ரூ.6 லட்சம் கொடுத்தால் சென்னை அழைத்துச்சென்று அமைச்சரை சந்திக்கலாம் என்றார்.

ரூ.18 லட்சம்

அதை நம்பி 3 பேரும் தலா ரூ.6 லட்சம் வீதம் மொத்தமாக ரூ.18 லட்சம் தயார் செய்து முருகனிடம் கூறினர். இவர்கள் 3 பேர் மற்றும் உறவினர்கள் என 5 பேரை சென்னை வடபழனி அழைத்து வந்த முருகன், அங்குள்ள ஓட்டலில் 3 அறைகள் எடுத்து தங்க வைத்தார்.

மறுநாள் மின்வாரியத்துறை அமைச்சரை சந்திக்கலாம் என அவர்களை சுரேஷின் காரில் அழைத்துச்சென்றார். கோடம்பாக்கம் அருகே வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கிய முருகன், தனது மோட்டார்சைக்கிளை எடுத்து வருவதாக கூறினார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் வரவில்லை. அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

போலீசில் புகார்

பின்னர் ஓட்டலுக்கு சென்று அறையில் இரவு வரை தங்கி இருந்தும் முருகன் வரவில்லை. செல்போனிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தாங்கள் தங்கி இருந்த அறையில் வைத்து இருந்த ரூ.18 லட்சமும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன்பிறகுதான் முருகன் தங்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பணத்தை மோசடி செய்ததை அறிந்தனர். பின்னர் இதுபற்றி வடபழனி போலீஸ் நிலையத்தில் 3 பேரும் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்