சோழவரம் கிராமத்தில் ஆடு, கோழிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

ஆடு, கோழிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

Update: 2021-07-07 13:41 GMT
அடுக்கம்பாறை

வேலூரை அடுத்த சோழவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார், விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து ஆடு, வாத்துகள் மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார். அவர் கடந்த 4-ந் தேதி தீவனம் போட சென்றபோது 11 கோழி, 4 வாத்துகள் கடிபட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் உடனடியாக உறவினர்களை அழைத்து வெறிநாய் ஏதாவது கடித்ததா? என்பதை அறிய அப்பகுதி முழுவதும் தேட சொன்னார். ஆனால் அங்கு எதுவும் இல்லை. வேறு ஏதாவது விலங்கு கடித்திருக்கக் கூடும் என சந்தேகம் அடைந்து அவரது குடும்பத்தினர்கடந்த 6-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை ஆட்டுக் கொட்டகையை நோட்டமிட்டபடி காத்திருந்தனர். 

அப்போது தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அவர்கள் 12 மணிக்கு மேல் வீட்டுக்குள் சென்று விட்டனர். நேற்று முன்தினம் காலை மீண்டும் வந்து பார்த்த போது கொட்டகையில் இருந்த 3 ஆடுகள், 4 வாத்து மற்றும் 5 கோழிகள் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தன. இந்த தகவல் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தெரிய வரவே பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காட்டு விலங்குகள் ஏதாவது வந்து ஆடு கோழி போன்றவற்றை கொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்