மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்

மாமல்லபுரத்தில் கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது.

Update: 2021-07-14 16:20 GMT
மாமல்லபுரம்,

யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக மாமல்லபுரம் திகழ்கிறது. இங்குள்ள கடற்கரை பகுதியில் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் பொழுதை போக்குவர். அவ்வப்போது கடற்கரை பகுதி ரிசார்ட், நட்சத்திர விடுதிகளில் தங்கி உள்ள பயணிகள் கடலில் குளித்து மகிழ்ச்சியில் ஈடுபடுவதும் உண்டு. மாமல்லபுரத்தில் கடந்த 2 நாட்களாக கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது.

நேற்று காலை கடல் அலைகள் 5 அடி உயரத்துக்கு எழும்பின. கடல் நீர் ராட்சத அலையுடன் திடீரென கரைப்பகுதி நோக்கி 10 அடி தூரத்திற்கு சீறி பாய்ந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக மணற்பகுதி கடல் நீரால் சூழப்பட்டு காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகளும் கடலில் குளிப்பதை தவிர்த்தனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

இது குறித்து மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் கூறும்போது:-

தற்போது கடலில் ஏற்படும் பருவமாற்றம், சீதோஷண நிலையை யாராலும் கணிக்க முடியவில்லை. எப்போது சுழல் காற்று வீசுகிறது. எப்போது சீற்றம் ஏற்படும் என்பதை கணிக்க மீனவர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக மாமல்லபுரம் மீனவர் பகுதி அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது. கடல் சீற்றம் ஏற்படாத வகையில் தமிழக அரசு கரைப்பகுதியில் தூண்டில் வளைவுகளை அமைக்க ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்