கூட்டுறவு சங்க அதிகாரிகளை சிறை வைத்து விவசாயிகள் போராட்டம்

பயிர்க்கடன் கேட்டு அளித்த மனுக்களை வாங்காததை கண்டித்து கூட்டுறவு சங்க அதிகாரிகளை சிறை வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-17 18:56 GMT
கம்மாபுரம், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரம் அருகே முதனையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்துக்கு நேற்று விவசாயிகள் சிலர் சென்றனர். பின்னர் அவர்கள், அங்கிருந்த அதிகாரிகளிடம் பயிர்க்கடன் கேட்டு மனு அளித்தனர். ஆனால் அந்த மனுவை அதிகாரிகள் வாங்கவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து விவசாயிகளுக்கு உரிய பதிலையும் அவர்கள் கூறவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அதிகாரிகளை உள்ளே வைத்து கூட்டுறவு சங்க கதவின் ஷட்டரை இழுத்து மூடி சிறை வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவலின் பேரில் ஊ.மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

நடவடிக்கை

பின்னர் ஷட்டர் கதவை திறந்து உள்ளே இருந்த அதிகாரிகளை விடுவித்தனர். அப்போது அங்கிருந்த விவசாயிகள் எங்களுடைய மனுவை வாங்கி அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து விவசாயிகளிடம் இருந்து மனுக்களை அதிகாரிகள் பெற்றனர். அதனை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்