கொரோனா தினசரி பாதிப்பு குறைய தொடங்கியது

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு குறைய தொடங்கியது. புதிதாக 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-07-18 17:40 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு குறைய தொடங்கியது. புதிதாக 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா 2-வது அலை

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக தினசரி பாதிப்பு 350-ஐ எட்டியது. அதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கையால் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது.
முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றாத மக்களுக்கு சுகாதாரத்துறை, காவல்துறை சார்பில் அபராதமும் விதிக்கப்பட்டது. கொரோனா 2-வது அலையின் போது உயிர் சேதம் அதிகமாக இருந்ததால் அதை தடுக்க தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட தயங்கிய மக்கள் அதன்பின்னர் அதன் தீவிரத்தை உணர்ந்து தடுப்பூசி போட ஆர்வம் காட்டினார்கள்.

கொரோனா குறைய தொடங்கியது

மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினருடன் இணைந்து அரசு அறிவித்தப்படி முதலில் முன்கள பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தியது. அதன்பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் தினசரி பாதிப்பு 27 ஆக குறைந்தது. தொற்று பாதிக்கப்பட்ட 27 பேரும் அரசு ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதித்த 27 பேரும் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 18 ஆயிரத்து 493 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

46 பேர் குணமடைந்தனர்

இதற்கிடையே மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 396 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 46 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

மேலும் செய்திகள்