மீன்பிடி ஒழுங்குமுறை திட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: மாமல்லபுரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

கடலுக்கு செல்லாமல் படகுகளில் கருப்பு கொடி ஏற்றி மாமல்லபுரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-20 00:40 GMT
மாமல்லபுரம்,

டெல்லியில் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வரும் சாகர்மாலா மீன்பிடி ஒழுங்கு முறை திட்ட மசோதாவில் மீனவர்களை பாதிக்கும் பல்வேறு அம்சங்கள் உள்ளதாகவும் அது தங்கள் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் கூறி இந்த சட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மாமல்லபுரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாததால் கடற்பகுதி படகு ஓட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கருப்பு கொடி ஏற்றினர்

மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை பகுதியில் மீன் வாங்க வந்த அசைவ பிரியர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது. மேலும் இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும், இல்லையென்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடும் சூழல் ஏற்படும் என்று மாமல்லபுரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த மத்திய அரசின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலம், புதுஎடையூர்குப்பம், கொக்கிலமேடு, வெண்புருஷம், தேவனேரி, நெம்மேலிகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களிலும் அங்குள்ள மீனவர்கள் தங்கள் படகுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்