லாரியில் ரகசிய அறை அமைத்து 328 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கேரளா சென்ற லாரியில் ரகசிய அறை அமைத்து 328 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-20 00:49 GMT
ஊத்துக்கோட்டை,

ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு லாரி மூலம் பெரிய அளவில் கஞ்சா கடத்தி வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர். அதன் பின்னர் வேகமாக வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். வெளிப்படையாக பார்த்தால் காலியான லாரி போன்ற தோற்றத்தில் இருந்தது.

ஆனாலும் சந்தேகம் தீராத போலீசார் லாரிக்குள் சென்று சோதித்தபோது அங்கு ரகசிய அறை ஒன்று இருப்பதை கண்டறிந்தனர்.

328 கிலோ கஞ்சா சிக்கியது

அதை திறந்து சோதித்ததில், ரகசிய அறைக்குள் கஞ்சா கடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்து விட்டனர். அங்கிருந்து 328 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. லாரியை ஓட்டி வந்த துபாஷ்சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சாவை வாங்குவதற்காக கேரள-தமிழக எல்லையில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காத்திருந்த ஸ்ரீநாத் என்பவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்