சாலையை சீரமைக்கக்கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 61 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-20 21:10 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 61 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணியால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக அவ்வை சண்முகம் சாலை, முதன்மை கல்வி அதிகாரி அலுவலக சாலை, கோட்டார் சாலை படுமோசமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே குண்டும், குழியுமான சாலைகளை சரி செய்ய கோரியும், பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் பா.ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு 20-ந் தேதி (அதாவது நேற்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி பா.ஜனதா நிர்வாகிகள் நேற்று காலை மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் தேவ் தலைமை தாங்கினார். மேற்கு மாநகர தலைவர் சிவபிரசாத், ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாநகர தலைவர் அஜித் குமார் வரவேற்றார். எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ், உமாரதி ராஜன், கிழக்கு மாநகர தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.
மேலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 61 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் வடசேரி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக பா.ஜனதாவினர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்