திருவள்ளூர் அருகே பெண்ணை நிர்வாண படங்கள் எடுத்து மிரட்டி ரூ.7 லட்சம் வாங்கிய வக்கீல் கைது

திருவள்ளூர் அருகே பெண்ணை நிர்வாண படங்கள் எடுத்து மிரட்டி ரூ.7 லட்சம் வாங்கிய வக்கீல் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-21 01:22 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியை சேர்ந்த 43 வயது பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் விவாகரத்து பெறுவதற்காக அவர் திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டுக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த வக்கீலான திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பெரியார் தெருவை சேர்ந்த டார்ஜன் (வயது 44) என்பவரை அந்த பெண் அணுகியுள்ளார்.

வக்கீல் டார்ஜன் வழக்கை நானே நடத்துகிறேன் என்று கூறி வழக்கு தொடர்பான ஆவணங்களை அந்த பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் அந்த பெண்ணுக்கு போன் செய்து சில ஆவணங்கள் கொடுக்கவில்லை. நானே வீட்டுக்கு வந்து அந்த ஆவணங்களை வாங்கி கொள்வதாக கூறினார். இதற்கு அந்த பெண்ணும் சம்மதித்தார்.

நிர்வாண படங்கள்

இதைத்தொடர்ந்து டார்ஜன் அந்த பெண் வீட்டுக்கு சென்றார். வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அப்போது டார்ஜன் தான் வாங்கி சென்ற ஆப்பிள் ஜூசில் தூக்க மாத்திரை கலந்து அதை அந்த பெண்ணுக்கு குடிக்க கொடுத்தார். சிறிது நேரத்தில் அந்த பெண் மயங்கினார். டார்ஜன் அந்த பெண்ணை நிர்வாணமாக்கி பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.

நிர்வாணமாக எடுத்த படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் என்று கூறி அவரிடம் பணம் கேட்டு மிரட்டி ரூ.3 லட்சம் பெற்றுள்ளார். மேலும் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார். அந்த பெண் ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் பணம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உனது நிர்வாண படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி வந்தார்.

கைது

வக்கீல் டார்ஜனுக்கு ஆதரவாக அவரது மனைவியும் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் பதறிப்போன அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையறிந்த டார்ஜன் தலைமறைவாகி விட்டார். இது சம்பந்தமாக திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வக்கீல் டார்ஜனை தீவிரமாக தேடி வந்தார்.

இதையடுத்து அவர் கொடைக்கானலில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று கொடைக்கானலில் பதுங்கியிருந்த டார்ஜனை கைது செய்து திருவள்ளூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்