கரூரில் உள்ள பண்டரிநாதன் பஜனை மடத்தில் ஆஷாட ஏகாதசி விழா

கரூரில் உள்ள பண்டரிநாதன் பஜனை மடத்தில் ஆஷாட ஏகாதசி விழாவையொட்டி கருவறையிலுள்ள மூலவரை பக்தர்கள் தொட்டு வணங்கி சென்றனர்.

Update: 2021-07-21 15:08 GMT
கரூர், 

கரூர் ஜவகர்பஜார் அருகே பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் பஜனை மடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பூலோக சொர்க்க திருநாள் என அழைக்கப்படும் ஆஷாட ஏகாதசி நாளில் மூலவரை கருறையினுள் சென்று பக்தர்கள் தொட்டு வழிபடும் நிகழ்ச்சி நடக்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு நேற்று ஆஷாட ஏகாதசி விழா நடைபெற்றது.

இதனையொட்டி காலை 6 மணியளவில் ரகுமாய் சமேத பண்டரிநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் பண்டரிநாதருக்கு துளசி மாலையை அணிவித்து கருவறையில் சென்று பாதம் தொட்டு மனமுருகி வணங்கி சென்றனர். இதில் ஆண்கள் மேல்சட்டை அணியாமல் சென்று வழிபாடு நடத்தினர். அந்த சமயத்தில் வெளிப்புற மண்டபத்தில் உற்சவர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆஷாட ஏகாதசி நாளில் பண்டரிநாதரை வழிபட்டால் சகல துன்பங்களும் நீங்கி வாழ்க்கையில் தெளிவு கிடைக்கும். எல்லாவித செல்வங்களும் கிடைக்கப்பெற்று முன்னேற்ற பாதையை நோக்கி செல்வதற்கு வழிபிறக்கும் என்பது ஐதீகம்.

இந்த நிகழ்ச்சியில் கரூர், செங்குந்தபுரம், திருமாநிலையூர், வெங்கமேடு, பசுபதிபாளையம், செல்லாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

மேலும் செய்திகள்