சோலார் மூலம் இயங்கும் சைக்கிளை வடிவமைத்த மாணவர்கள்

சிவகங்கையில் சோலார் மூலம் இயங்கும் சைக்கிளை மாணவர்கள் வடிவமைத்து உள்ளனர்.

Update: 2021-07-21 20:07 GMT
சிவகங்கை,

 சிவகங்கை காலேஜ் ரோட்டை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன்கள் வீரகுருஹரிகிருஷ்ணன் (வயது 12), சம்பத்கிருஷ்ணன் (11). வீரகுருஹரிகிருஷ்ணன் திருப்புவனம் வேலம்மாள் பள்ளியில் 8-ம் வகுப்பும், சம்பத்கிருஷ்ணன் சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி திறக்கப்படாத நிலையில் சைக்கிளில் வலம் வந்த மாணவர்கள் இருவரும் அதே சைக்கிளை வேறு விதமாக மாற்ற முடிவு செய்தனர். சைக்கிளில் பெடல் செய்து ஓட்ட சிரமப்படும் முதியோர் குறித்து அறிந்து அவர்களுக்கு உதவும் வகையில் மோட்டார் மூலம் இயங்கும் சைக்கிளை சோலார் மூலம் வடிவமைத்தனர்.
 இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:-
 சாதாரண சைக்கிள் முதல் அனைத்து வகையான சைக்கிளையும் இது போல் மாற்றலாம். சைக்கிளுடன் சேர்த்து ரூ.10ஆயிரம் மட்டுமே இதற்கு செலவாகும். சூரிய ஒளிபடும் போது மின்சாரம் மூலம் 5 மணி நேரம் சார்ஜ் செய்தால் 30 கி.மீ. தூரமும் சைக்கிள் செல்லும். சைக்கிளில் சுவிச்சை ஆன் செய்து விட்டால் 25 முதல் 35 கி.மீ. வேகத்தில் மட்டும் தற்போதைய வடிவமைப்பில் செல்லும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் இணையதளத்திலும் தகவல்களை சேகரித்து இந்த சோலார் சைக்கிளை வடிவமைத்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்