ஆமை வேகத்தில் வீடுகள் கட்டும் பணி

தேவதானப்பட்டி மலைப்பகுதியில் பழங்குடியின மக்களுக்கான வீடுகள் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

Update: 2021-07-22 12:36 GMT
தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி மஞ்சளாறு அணையின் மேற்குபுறத்தில் ராசிமலை நகர் என்ற மலைக்கிராமம் உள்ளது. இங்கு கொடைக்கானல் மலையில் பல்வேறு இடங்களில் வசித்த பழங்குடியினத்தை சேர்ந்த 26 குடும்பத்தினருக்கு, கடந்த 1999-ம் ஆண்டு ஜி.கல்லுப்பட்டியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. தற்போது அந்த வீடுகள் பழுதடைந்து விட்டன. 

இதைக்கருத்தில் கொண்டு குடிசை மாற்று வாரியத்தின் மூலம், தலா ரூ.11 லட்சம் மதிப்பில் 32 வீடுகள் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கியது. ஆனால் பணி தொடங்கி, கடந்த 2 ஆண்டுகள் ஆகிய நிலையில் இன்னும் நிறைவடையவில்லை. குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களை கொண்டு ஆமைவேகத்தில் பணிகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

இதனால் பழங்குடியின மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியிலேயே தார்ப்பாய், ஓலைகள் மூலம் குடிசைகள் அமைத்து பாதுகாப்பற்ற நிலையில் அவர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு அப்பகுதியில் வலம் வருகிற காட்டெருமைகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

 இதுமட்டுமின்றி அப்பகுதியில் போதிய அளவு தெருவிளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் ஒரு வித பயத்துடன் பழங்குடியின மக்கள் அங்கு உள்ளனர். 

இன்னும் ஓரிரு மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக கட்டுமான பணிகளை முடித்து பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்