சுற்றுலா இடங்களை மீண்டும் திறக்க வேண்டும்

கொடைக்கானலில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் சுற்றுலா இடங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-22 16:05 GMT
கொடைக்கானல்: 

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். 

அவை 2 நாட்களில் மீண்டும் மூடப்பட்டன. இதனால் சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்யாததால் களையிழந்து காட்சி அளிக்கிறது. சுற்றுலா தொழிலையே நம்பி வாழும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவியாபாரிகள், வழிகாட்டிகள், வாகன டிரைவா்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தற்போது நகர் பகுதியில் நோய்த்தொற்று குறைந்துள்ள நிலையில் மீண்டும் சுற்றுலா இடங்களை திறக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அரவிந்திடம் கேட்டபோது,  கொடைக்கானல் நகர் பகுதியில் மட்டும் சுமார் 24 ஆயிரம் பொதுமக்கள் உள்ளனர். இதில் 232 பேர் வெளியூர்களுக்கு சென்று விட்டனர். மீதம் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 100 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். 

அதேபோல கிராமப் பகுதிகளிலும் 55 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று வரை 6 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். கடந்த 8 நாட்களாக புதிய தொற்று யாருக்கும் ஏற்படவில்லை என்றார். 

மேலும் செய்திகள்