உயர் மின் கோபுரங்களில் கம்பிகளை இணைக்கும் பணிகளை தடுத்து நிறுத்திய விவசாயிகள்

உயர் மின் கோபுரங்களில் மின் கம்பிகளை இணைக்கு பணிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.

Update: 2021-07-22 18:33 GMT
வேட்டவலம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த கோணலூர், நல்லான் பிள்ளைபெற்றாள் கிராமங்களில் உள்ள விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது உயர் மின் கோபுரங்களில் மின் கம்பிகள் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 

இந்த நிலையில் நேற்று உயர் மின் அழுத்த கோபுர மாநில ஒருங்கிணைப்பாளர் எல்.பலராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் உயர் மின்கோபுரத்திற்கு தருவதாக கூறிய இழப்பீடு தொகை முறையாக வழங்கவில்லை எனக்கூறி உயர் மின் கோபுரத்தில் மின் கம்பிகளை இணைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிடும்படி கூறினர்.

அப்போது விவசாயிகள், நிலத்தில் இருந்த மரங்களை அகற்றியதற்கான இழப்பீடும், நிலுவையில் உள்ள இழப்பீடு தொகையை வழங்கினால் தான் உயர் மின் கோபுரத்தில் மின் கம்பிகளை அமைக்கும் பணிகளை நடத்த விடுவோம் என கூறினர்.

பின்னர் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோணலூர் மாரியம்மன் கோவில் மரத்தடியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கேயே சமைத்தும் சாப்பிட்டனர். 

மேலும் செய்திகள்