சார்பதிவாளர், உதவியாளர்கள் இடமாற்றம்: திருச்சியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடிய பொதுமக்கள்

திருச்சியில் சார்பதிவாளர் மற்றும் உதவியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதற்காக, திருச்சியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

Update: 2021-07-22 19:12 GMT
திருச்சி,

திருச்சியில் சார்பதிவாளர் மற்றும் உதவியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதற்காக, திருச்சியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

அதிரடி மாற்றங்கள்

திருச்சியில் கடந்த 19-ந்தேதி வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடந்தது. ஆய்வு முடிந்த பின்னர், திருச்சி கோர்ட்டு அருகே உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை செய்தார். 

அப்போது பல்வேறு முறைகேடுகள் பத்திரப்பதிவு செய்ததில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அமைச்சர் புறப்பட்டு சென்று விட்டார். அதைத்தொடர்ந்து திருச்சி மண்டல பத்திரப்பதிவுத்துறை டி.ஐ.ஜி. லதா, மண்டலத்திற்குட்பட்ட சார்பதிவாளர்கள் 11 பேர், உதவியாளர்கள் 6 பேர் என 17 பேரை ஒவ்வொருவராக இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தவாறு இருந்தார்.

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அதன்படி, சார்பதிவாளர்கள் திருச்சி அஞ்சனகுமார், மணப்பாறை புலிப்பாண்டியன், கரூர் வழிகாட்டி கண்ணன், துவரங்குறிச்சி ரவிச்சந்திரன், செந்துறை மகாராஜன், வாலிகண்டபுரம் சிவனேசன், குளத்தூர் சுகன்யா, புதுக்கோட்டை மூக்காயி, கறம்பக்குடி பாரதிதாசன், உடையார் பாளையம் சிவகுமார், நங்கவரம் சுரேஷ்பாபு மற்றும் உதவியாளர்கள் திருச்சி 1-வது அலுவலகம் ஜோஸ்பின் கீதா, அரியலூர் மாவட்ட பதிவாளர் அலுவலகம் ஸ்ரீராம், திருச்சி மாவட்ட பதிவாளர் அலுவலகம் மாரிமுத்து, கறம்பக்குடி சேதுராமகிருஷ்ணன், மணமேல்குடி நாகேஷ், வேப்பந்தட்டை பாலு ஆகியோர் மாற்றப்பட்டனர்.

இதற்கிடையே திருச்சியில் சார்பதிவாளர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு மலைக்கோட்டை பகுதியில் உள்ள ஆவண எழுத்தர்களும், பொதுமக்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கீகரிக்கப்படாத மனையை பதிவு செய்தது மற்றும் முறைகேடு தொடர்பான புகார்களுக்கு ஆளானவர் மாற்றப்பட்டதை அறிந்து சாலையில் பட்டாசு வெடித்தும், சாலையில் சென்றவர்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்