ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.3 லட்சம் நகை- பணம் அபேஸ்

விழுப்புரத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-07-22 19:12 GMT
விழுப்புரம், 

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நந்தா மனைவி ராதா (வயது 38). இவர் தனது பெற்றோர் வீடான விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அடுத்த கடையம் கிராமத்திற்கு  வந்திருந்தார். பின்னர் மீண்டும் சென்னை செல்வதற்காக ராதா, நேற்று மதியம் கடையம் கிராமத்திலிருந்து அரசு பஸ்சில் விழுப்புரம் புறப்பட்டார். அந்த சமயத்தில் அவர், தான் அணிந்திருந்த 8 ½ பவுன் நகையை கழற்றி பாதுகாப்பாக ஒரு மணிபர்சில் வைத்து அதனை துணிக்கடை பையில் வைத்திருந்தார். இந்நிலையில் அந்த பஸ் விழுப்புரம் வந்ததும் புதிய பஸ் நிலைய நுழைவுவாயில் முன்பு ராதா, பஸ்சிலிருந்து கீழே இறங்கினார். அதன்பிறகு  தான் கொண்டு வந்திருந்த துணிப்பையை பார்த்தார். அப்போது அந்த பையினுள் இருந்த மணிபர்சில் வைத்திருந்த நகை மற்றும் ரூ.11,500 காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

பஸ்சில் பயணம் செய்த யாரோ மர்ம நபர், நைசாக ராதா, வைத்திருந்த பையிலிருந்த நகை- பணத்தை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.3 லட்சமாகும். இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்