குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகம் முற்றுகை

ராமநாதபுரம் அருகே சோலை நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2021-07-23 14:58 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட சோலை நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் நேற்று காலை ராமநாதபுரம் யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்து முடிந்த நிலையில் யூனியன் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கிராம பொதுமக்களிடம் குறைகளை கேட்டனர். 
அப்போது கிராமத்தினர் கூறியதாவது:- 
எங்கள் கிராமத்தில் சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை தேவைகளும் செய்து கொடுக்கவில்லை. ஒரு குடம் தண்ணீர் ரூ.15 முதல் ரூ.20 வரை விலை கொடுத்து வாங்கி குடித்து வருகிறோம். நாங்கள் வேலை பார்த்து சம்பாதிக்கும் பணம் அனைத்தும் குடிநீருக்கே செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே உடனடியாக எங்கள் கிராமத்திற்கு குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த தலைவர் பிரபாகரன் உடனடியாக மேற்கண்ட பகுதியில் தற்காலிகமாக தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், ஜல் ஜீவன் திட்டத்தில் நிரந்தரமாக குடிநீர் பிரச்சினைக்கு வழிவகை செய்வதாகவும் உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து முற்றுகையிட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்