ரூ.31½ லட்சத்தில் ஊர்க்காவல் படை அலுவலக கட்டிடம்

திருவாரூரில் ரூ.31½ லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊர்க்காவல் படை அலுவலக கட்டிடத்தினை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார்.

Update: 2021-07-23 18:08 GMT
திருவாரூர்:
திருவாரூரில் ரூ.31½  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊர்க்காவல் படை அலுவலக கட்டிடத்தினை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார்.
பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் தனியார் துறையில் வேலை வாய்ப்பு வேண்டி விண்ணப்பித்த இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குனர் வீரராகவராவ், மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பல்வேறு நடவடிக்கைகள் 
தமிழக அரசு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி தருகின்ற விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இளைஞர்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்தி தர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு வேண்டி உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஊர்க்காவல் படை அலுவலக கட்டிடம்
இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.31.52 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊர்க்காவல் படை அலுவலக கட்டிடத்தினை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார்.
இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, வேலைவாய்ப்பு இணை இயக்குனர் சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், உதவி கலெக்டர் பாலசந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தினேஷ்குமார், சலீம் ஜாவீட், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் அழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்