ஆபத்தான மரங்கள் வெட்டி அகற்றம்

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொடர் மழையால் முன்னெச்சரிக்கையாக ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றி தேசிய பேரிடர் மீட்பு படையினர் நடவடிக்கை எடுக்கின்றனர்

Update: 2021-07-25 21:54 GMT
கூடலூர்

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொடர் மழையால் முன்னெச்சரிக்கையாக ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றி தேசிய பேரிடர் மீட்பு படையினர் நடவடிக்கை எடுக்கின்றனர்.

தொடர் மழை

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கேரளா செல்லும் சாலைகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் ஊட்டி, கூடலூர் பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்து உள்ளனர். கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் நேற்று காலை முதல் லேசான வெயில் காணப்பட்டது. பின்னர் 11 மணிக்கு பிறகு தொடர்ந்து மழை பெய்தது. 

மரங்கள் வெட்டி அகற்றம்

இதனிடையே மழை தொடர்ந்து பெய்வதால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடங்கி உள்ளனர். கூடலூர் தாலுகா ஓவேலி, தேவர்சோலை, தேவாலா மற்றும் பந்தலூர் தாலுகா பகுதியில் முக்கிய சாலையோரம் எந்த நேரத்திலும் சரிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான மரங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். 

நேற்று ஓவேலி பகுதியில் சாலையோரம் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றினர். தொடர்ந்து கொட்டும் மழையில் தேவாலா பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றும் பணி நடந்தது. இதேபோல் பந்தலூர் தாலுகா பகுதிகளில் மரங்களை வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தயார் நிலையில்...

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் கூறியதாவது:- கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் இனிவரும் காலங்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

முதற்கட்டமாக சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஆபத்தான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. அதன்பின்னர் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் இடங்களை ஆய்வு செய்யப்படும்.

 மேலும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் சமயத்தில் விரைவாக சென்று மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்