உடன்குடியில் சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றும் செய்யக்கூடாது போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கலெக்டரிடம் வலியுறுத்தல்

உடன்குடியில் மையப்பகுதியில் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்று போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2021-07-26 12:47 GMT
தூத்துக்குடி:
உடன்குடியில் மையப்பகுதியில் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்று போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கோரிக்கை மனு
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடந்து வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்து வருகின்றனர். நேற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அலுவலகம் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அலுவலக மெயின் கேட் அருகே வைக்கப்பட்ட பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்.
ஆர்ப்பாட்டம்
இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், கைது செய்யப்பட்ட மதபோதகர் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ்வார்க்கும் நிகழ்ச்சிக்கு இலவச தானியங்கள் வழங்க வேண்டும். சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்குவது போன்று, இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். கொரோனா தடுப்பூசியை தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவசமாக வழங்க வேண்டும். மின்கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்ககைளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
குடிநீர் பிரச்சினை
வர்த்தகரெட்டிபட்டி பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘வர்த்தகரெட்டிபட்டி பஞ்சாயத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும், தெருவிளக்குகள் பராமரிமரிப்பு பணிகள் செய்து, 100 சதவீம் விளக்குகள் எரிய நவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை அடையாள அட்டை பெறாதவர்களுக்கு உரிய அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
தமிழ்நாடு விவசாய சங்கம் ஏரல் தாலுகா தலைவர் வெள்ளச்சாமி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து இடையற்காட்டுக்கு அரசு டவுன்பஸ் இயக்கப்பட்டு வந்தது. அந்த பஸ் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. அதனை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
அரை நிர்வாணம்
நெல்லை மணிமூர்த்தீசுவரத்தை சேர்ந்த சிவப்பிரமணியன்  என்பவர் நேற்று மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கோரிக்கையை வலியுறுத்தி பெட்டியில் மனுவை போட்டார். அந்த மனுவில், நான் விவசாயம் செய்து வருகிறேன். கடந்த 2019-ம் ஆண்டு வல்லநாடு அருகே உள்ள ஈசந்தாஓடையில் நிலம் வாங்கினேன். அந்த நிலத்தில் விவசாயம் செய்ய விடாமல் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தடுத்து மிரட்டி வருகின்றனர். ஆகையால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
தூத்துக்குடி 30-வது வார்டு அ.ம.மு.க. வட்ட செயலாளர் காசிலிங்கம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து உள்ள மனுவில், தூத்துக்குடி மாநகரம் டூவிபுரம், மணிநகர் பகுதியில் திருமண மண்டபங்கள் பெரிய ஜவுளி நிறுவனங்கள் உள்ளன. இதில் பல திருமண மண்டபம் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வாகன நிறுத்தும் வசதி இல்லை. இதனால் வாகனங்களை சாலையில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. ஆகையால் வாகன நிறுத்தும் வசதி இல்லாத திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.
சார்பதிவாளர் அலுவலகம்
உடன்குடி சார்பதிவாளர் அலுவலக இடமாற்ற எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆசாத், ஆறுமுகம், குணசீலன், ரவி ஆகியோர் தலைமையில் போராட்டக ்குழுவினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர். 
அந்த மனுவில், ‘உடன்குடி பத்திரப்பதிவு அலுவலகம் உடன்குடி மையப்பகுதியில் இருக்கிறது.  அதனை விடுத்து குலசேகரன்பட்டினம் ரோடு பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்காக கட்டிடம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. ஆகையால் பத்திரப்பதிவு அலுவலகம் இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய விசாரணை நடத்தி பொதுமக்களின் சிரமங்களை போக்கும் வகையில் உடன்குடி மையப்பகுதியிலேயே சார்பதிவாளர் அலுவலகத்தை அமைக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
இறந்த ராணுவவீரரின் பெற்றோர்...
கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்தை சேர்ந்த, லடாக்கில் இறந்த ராணுவீரர் கருப்பசாமியின் பெற்றோர் கந்தசாமி, சின்னத்தாய் ஆகியோர் மகன் கருப்பசாமியின் புகைப்படத்தை ஏந்தியபடி வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில், மருமகளிடம் உள்ள தங்கள் பேரக்குழந்தைகளை பார்க்க அனுமதிக்கவும், நிவாரண உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்