வலங்கைமான் அருகே ஆபத்தான நிலையில் சுள்ளானாற்று பாலம் கிராம மக்கள் அச்சம்

வலங்கைமான் அருகே சுள்ளானாற்றில் உள்ள பாலம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Update: 2021-07-26 15:55 GMT
வலங்கைமான், 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே விருப்பாட்சிபுரம் ஊராட்சியில் சின்னகரம், அட்டமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் சுள்ளான் ஆற்றையொட்டி உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக சுள்ளான் ஆற்றின் குறுக்காக கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னதாக பாலம் கட்டப்பட்டது.

வலங்கைமான் பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் சின்னகரம் கிராம பகுதியில் அமைந்து உள்ளது. விவசாயிகள் சுள்ளானாற்று பாலத்தை கடந்து தான் தங்கள் வயல்களுக்கு செல்ல முடியும்.

உரம் போன்ற இடு பொருட்களை வயல்களுக்கு கொண்டு செல்வது, விளை பொருட்களை விற்பனைக்கு எடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளுக்கு சுள்ளானாற்று பாலம் பயன்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாலம் சேதம் அடைந்து காணப்படுகிறது.

பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் சேதம் அடைந்து பாலம் ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் காரணமாக கிராம மக்கள் அச்சத்துடன் பாலத்தை கடந்து சென்று வருகிறார்கள். முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் உள்ள பாலத்தில் பயணிப்பது சிரமமாக இருப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சேதம் அடைந்த பாலத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய பாலம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்