கொரோனா சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் 4633 பயனாளிகளுக்கு ரூ 6 கோடி கடன்

கொரோனா சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் 4633 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 39 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்

Update: 2021-07-26 16:35 GMT
கள்ளக்குறிச்சி

 கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தொழில்களை மேம்படுத்த

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோரால் மேற்கொள்ளப்படும் வாழ்வாதாரத் தொழிலை மேம்படுத்துவதற்காகவும், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் தொழில்களின் மூலம் வளமும், வலிமையும் பெறுவதற்காகவும், பிற பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு புதிதாக தொழில் தொடங்க தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

97 ஊராட்சிகளில்

இத்திட்டத்தின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 2 வட்டாரங்களைச் சேர்ந்த 97 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சிறப்பு நிதி உதவித் தொகுப்பின் மூலம் மாவட்டத்தில் இதுவரை 4,633 பயனாளிகள ரூ.6 கோடியே 39 லட்சம் கடன் பெற்று பயனடைந்துள்ளனர்.

இதில் 1,079 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் என்ற அடிப்படையில் மொத்தம் ரூ.3 கோடியே 88 லட்சம் நீண்ட கால தனிநபர் தொழில் கடனாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்டிக்கடை, சிறு உணவகம், மளிகைக் கடை, ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் பழுது பார்ப்பு நிறுவனம் போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலையில்லாத இளைஞர்களுக்கு

27 உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 2,620 நபர்கள் பயன்பெறும் வகையில் ஒருமுறை மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.40½ லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையை கொண்டு கொரோனா காலத்தில் எதிர்கொண்ட இடர்பாடுகளை களையவும், விவசாயத்திற்கான இடுபொருட்கள் சந்தைப்படுத்துதல், செக்கு எண்ணெய் தயாரிப்பு போன்ற செயல்பாடுகளுக்கு பயன்படுத்தியுள்ளனர்.

புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த திறன் பெற்றவர்களில் வேலையில்லாத 90 இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.90 லட்சம் நீண்ட கால கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சொந்த கிராமத்திலேயே முதலாளிகளாக இயன் மருத்துவம், வாடகை பாத்திரக்கடை, மளிகைக் கடை, அழகு நிலையம், நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள்

கொரோனா காலத்தில் தங்களது வாழ்வாதாரங்களை இழந்த மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோர் உள்ளிட்ட நலிவுற்றோரின் தொழில் மேம்பாட்டிற்காக நபர்களை தேர்ந்தெடுத்து தொழில் மூலதன நிதியாக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் 844 நபர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் என்ற அடிப்படையில் மொத்தம் ரூ.1 கோடியே 21 லட்சம் நீண்ட கால கடனாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலமாக கொரோனா ஊரடங்கு காலங்களில் வாழ்வாதாரங்களை இழந்த கிராமப்புற மக்களுக்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் மேலும் பொதுமக்கள் சேர்ந்து பயனடைய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்