மயிலம் அருகே துணிகரம்: கல்லூரி பேராசிரியை குடும்பத்தை கட்டிப்போட்டு ரூ.18½ லட்சம் நகை கொள்ளை முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

மயிலம் அருகே கல்லூரி பேராசிரியை குடும்பத்தை கட்டிப்போட்டு ரூ.18½ லட்சம் மதிப்புள்ள நகைகளை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

Update: 2021-07-26 16:49 GMT
மயிலம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே உள்ள வெளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் வேணு (வயது 62). இவர் அந்த பகுதியில் நிதிநிறுவனம் மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். 

இவருடைய மனைவி முத்துலட்சுமி(58). மகள் விஜயகுமாரி (30). இவர் திண்டிவனம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் வேணு, முத்துலட்சுமி, பேராசிரியை விஜயகுமாரி ஆகியோர் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர். 

அப்போது, முகமூடி அணிந்து வந்த 5 கொள்ளையர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்தனர். பின்னர் வீட்டுக்கு வெளியே ஒருநபரை நிறுத்திவிட்டு, மற்ற 4 பேரும் வீட்டுக்குள் புகுந்தனர்.

கட்டிப் போட்டனர்

இந்த சத்தம்கேட்டு திடுக்கிட்டு எழுந்த வேணு மற்றும் அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டனர். அதற்குள் 3 பேரின் கழுத்திலும் முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் தனித்தனியே பட்டாகத்தியை வைத்து, சத்தம்போட்டால் கொன்றுவிடுவதாக கூறி மிரட்டினர்.

பின்னர், அவர்கள் சத்தம் போடாமல் இருக்க வாயில் டேப்பை கொண்டு ஒட்டினர். மேலும் அவர்களது கைகளையும் பின்பக்கமாக வைத்து கட்டிப் போட்டனர்.

திருமண நகைகள் கொள்ளை

அதன்பிறகு முத்துலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலி மற்றும் விஜயகுமாரிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அதற்காக வாங்கி பீரோவில் வைத்திருந்த 44 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.18½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதன் பின்னர் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு விஜயகுமாரி உள்ளிட்ட 3 பேரும் தங்கள் கைகளில் கட்டப்பட்டு இருந்த கட்டுகளை, ஒருவரையொருவர் மாற்றி அவிழ்த்துக்கொண்டனர்.

போலீசார் விரைந்தனர்

இதையடுத்து, கொள்ளை சம்பவம் குறித்து வேணு மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  ஸ்ரீநாதா  தலைமையில், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், மயிலம் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டதோடு, வேணுவிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் தடயவியல் நிபுணர்கள் நேரில் வந்து அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். 

மேலும் விழுப்புரத்தில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி பிரதான சாலை வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

வலைவீச்சு

மேலும் இந்த  கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்