ஊராட்சி அலுவலகத்தில் ஆடு, மாடுகளுடன் குடியேறிய கிராமமக்கள்

குளமங்கலம் வடக்கு கிராமத்தில் சாலையில் அமைக்கப்பட்ட வேலியை அகற்றக்கோரி ஊராட்சி அலுவலகத்தில் ஆடு, மாடுகளுடன் கிராம மக்கள் குடியேறினர்.

Update: 2021-07-26 18:08 GMT
கீரமங்கலம், ஜூலை.27-
குளமங்கலம் வடக்கு கிராமத்தில் சாலையில் அமைக்கப்பட்ட வேலியை அகற்றக்கோரி ஊராட்சி அலுவலகத்தில் ஆடு, மாடுகளுடன் கிராம மக்கள் குடியேறினர். பேச்சுவார்த்தையின் போது ஒரு பெண் மண்எண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியேறினர்
கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தில் கொப்பியான் குடியிருப்பு பகுதியில் கடந்த 2009-2010-ம் ஆண்டு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மெட்டல், கிராவல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த சாலையை செப்பனிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த சாலையில் சில நாட்களுக்கு முன்பு ஒருவர் சாலையின் குறுக்கே வேலி அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினார்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பின்னும் வேலி தடுப்புகள் அகற்றப்படவில்லை. இதனையடுத்து நேற்று காலையில் அப்பகுதியை சேர்ந்த  75-க்கும் மேற்பட்டோர் வீட்டில் இருந்த பாத்திரங்கள், பாய், தலையணை உள்ளிட்ட பொருட்களுடன், குழந்தைகளை அழைத்துக்கொண்டும், சிலர் தங்கள் வீட்டில் நின்ற ஆடு, மாடுகளையும் ஓட்டி வந்தும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியேறினார்கள். தொடர்ந்து அங்கேயே சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார், ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, ஊராட்சிமன்றத் தலைவர் பாஞ்சாலிசெல்வகுமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தநிலையில்  சாலையில் வேலி அமைத்தவர், எனது நிலத்தில் அனுமதி இல்லாமல் சாலை அமைத்து இருக்கிறார்கள். அதனால்தான் வேலி அமைத்திருப்பதாக கூறினார். தொடர்ந்து ஒரு வாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று கூறி வேலியை அதிகாரிகள் அகற்றினார்கள்.
மண்எண்ணெய் ஊற்றிக்கொண்ட பெண்...
இதனையடுத்து  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியபோது, நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போகமாட்டோம் என்று கூறி சுமதி என்ற பெண் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றினார். உடனடியாக போலீசார் மண்எண்ணெய் கேனை பறித்து அவர் மீது தண்ணீர் ஊற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் அப்பகுதி மக்கள் இன்னும் ஒரு வாரத்தில் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்றால் மீண்டும் குடியேறுவோம் என்று கூறி போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்