காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை திருவப்பூரில் குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசமடைந்தனர்.

Update: 2021-07-26 18:09 GMT
புதுக்கோட்டை, ஜூலை.27-
புதுக்கோட்டை திருவப்பூரில் குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசமடைந்தனர்.
சாலை மறியல்
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட திருவப்பூர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லையாம். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே காலிக்குடங்களுடன் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் நகராட்சி ஆணையர் நாகராஜ், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். தொடர்ந்து குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. வாகனஓட்டிகள் அவதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்