பெண் போலீஸ் பணிக்கு உடற்தகுதி தேர்வு

பாளையங்கோட்டையில் பெண் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இதில் தென்காசி, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.

Update: 2021-07-26 19:15 GMT
நெல்லை:
பாளையங்கோட்டையில் பெண் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இதில் தென்காசி, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.

போலீஸ் பணி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய பெண் போலீஸ் பணி மற்றும் சிறைத்துறை, தீயணைப்பு துறை ஆகியவற்றுக்கு நடந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 623 பெண்களுக்கு பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானத்தில் நேற்று காலை 9 மணிக்கு உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு தொடங்கியது.

இந்த தேர்வில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு 500 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்வில் கலந்து கொண்ட பெண்களுக்கு உயரம் அளக்கப்பட்டது. மேலும் அவர்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் கலந்து கொள்ள ஏராளமான பெண்கள் அதிகாலை 4.30 மணிக்கு வந்து விட்டனர். இவர்களில் அழைப்பு கடிதம், அடையாள அட்டை, கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருந்தவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர். இந்த தேர்வை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைகண்ணன் தலைமையில் போலீசார் கண்காணித்தனர்.

ஆண்கள்

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 3 ஆயிரத்து 437 ஆண்களுக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று உடற்தகுதி தேர்வு தொடங்கியது. இதில் 500 பேர் கலந்து கொண்டனர். 
அவர்களுக்கு முதலில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உயரம், மார்பளவு அளக்கப்பட்டது.
1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் கலந்து கொள்ள இளைஞர்கள் அதிகாலை 3 மணிக்கே வந்து விட்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் செய்திருந்தனர். போலீஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதையொட்டி நெல்லையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்