மயானத்திற்கு செல்ல நடைபாதை வேண்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு

மயானத்திற்கு செல்ல நடைபாதை வேண்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2021-07-26 19:16 GMT
கரூர்
புகார் மனு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் நேற்று ஏராளமான பொதுமக்கள் வந்து மனு போட்டனர். இதில், கரூர் நெரூர் தென்பாகம் ஊராட்சி, வேடிச்சிப்பாளையம், அம்பேத்கர் தெரு ஊர்பொதுமக்கள் சார்பில் போட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
வேடிச்சிப்பாளையம், அம்பேத்கர் தெரு, ஆதிதிராவிட மக்களின் அந்திம கால இறுதி சடங்கு செய்யவும், இறந்தோரை புதைக்கவும், எரியூட்டவும் பயன்படுத்திக்கொள்ள பன்னெடுங்காலமாக வேடிச்சிபாளையம் முதல் கல்லுப்பாளையம் செல்லும் சாலையிலிருந்து இடதுபக்கம் 100 அடி தூரம் தாண்டி, நடு வளையல் பகுதியில் இருக்கும் மயானம் எங்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மயானம் நெரூர் தென்பாகம் பஞ்சாயத்து ஊராட்சிக்கு சொந்தமானது. 
சாலை வசதி
  இந்த மயானத்திற்கு செல்ல நடைபாதையோ, வண்டி செல்லும் பாதையோ இல்லை. மயான பூமிக்கு அருகில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்வதால் இறந்தவர்களின் உடலை வாய்க்கால், வரப்புகளில் எடுத்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே தலைமுறையாய் எங்கள் பயன்பாட்டில் உள்ள இந்த மயானத்திற்கு இறந்தவர்களை தூக்கிக்கொண்டு நடந்து செல்வதற்கு ஏதுவாக உரிய இடத்தை பெற்று, அதில் நடைபாதை, சாலை, மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்புதல், தண்ணீர் வசதி, கட்டிட வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தரவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்