2 நாட்களுக்கு முன்பாக ஏலத்திற்கு பருத்தியை எடுத்து வந்த விவசாயிகள்

கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 2 நாட்களுக்கு முன்பாக ஏலத்திற்கு பருத்தி எடுத்து வந்ததால் அந்த பகுதியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.

Update: 2021-07-26 20:11 GMT
கும்பகோணம்:
கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 2 நாட்களுக்கு முன்பாக ஏலத்திற்கு பருத்தி எடுத்து வந்ததால் அந்த பகுதியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
கும்பகோணத்தை அடுத்த கொட்டையூர் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனைகூடம் உள்ளது. இதில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தி, எள், பச்சைப்பயிறு உள்ளிட்ட பொருட்களை ஏலத்திற்காக கொண்டு வருவார்கள். இங்கு கொண்டு வரும் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, அதற்கான தொகையை விவசாயிகளுக்கு வங்கி மூலம் வழங்கப்படும். 
இதனால் கும்பகோணம், நீலத்தநல்லூர், கொற்கை, பட்டீஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை கொட்டையூரில் உள்ள ஏல கூடத்திற்கு ஏலத்திற்கு கொண்டு வருவது வழக்கம். 
பருத்தி ஏலம்
கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தற்போது பருத்தி அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ஏலத்திற்காக பருத்தி எடுத்து வருவார்கள்.
கும்பகோணத்தில் இந்த ஆண்டிற்கான பருத்தி ஏலம் கடந்த மாதம் தொடங்கியது. இதற்கான ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடந்து வருகிறது. 
நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்
ஆரம்பத்தில் ஏலம் நடைபெறும் அன்று ஏலத்திற்கு பருத்தியை விவசாயிகள் எடுத்து வந்தனர். தற்போது பருத்தி விளைச்சல் அதிகரிப்பால், விவசாயிகள் 2 நாட்களுக்கு முன்னதாக ஏலத்திற்கு எடுத்து வருகின்றனர். 
இந்த நிலையில் நாளை(புதன்கிழமை) நடைபெற உள்ள பருத்தி ஏலத்திற்கு நேற்றே(திங்கட்கிழமை) விவசாயிகள் வாகனங்களில் எடுத்து வந்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் விவசாயிகள் பருத்தியை எடுத்து வந்தனர். இதன் காரணமாக கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து சுவாமிமலை நால் ரோடு பகுதி வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து நெரிசல்
இவ்வாறாக பருத்தி எடுத்து வந்த வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

மேலும் செய்திகள்