மூதாட்டி கொலையில் மருமகளின் கள்ளக்காதலன் கைது

பெங்களூரு அருகே மூதாட்டி கொலை வழக்கில் மருமகளின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2021-07-26 20:52 GMT
பெங்களூரு:

தண்டவாளத்தில் உடல்

  பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் கடந்த 20-ம் தேதி தலை இல்லாமல் ஒரு பெண்ணின் உடல் கிடந்தது. இதுகுறித்து பெங்களூரு புறநகர் மாவட்ட ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண்ணை வேறு இடத்தில் வைத்து தலை துண்டித்து கொலை செய்துவிட்டு உடலை மட்டும் ரெயில்வே தண்டவாளத்தில் வீசியது தெரியவந்தது. ஆனால் அந்த பெண்ணை பற்றிய எந்த தகவல்களும் இல்லாமல் இருந்தது. இதுபற்றி மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

  அப்போது பாகல்கோட்டை மாவட்டம் இலகல் போலீசாரிடம் இருந்து பெங்களூரு புறநகர் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதாவது மினி லாரியில் ஒரு பெண்ணின் தலை மட்டும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அந்த பெண்ணின் தலை புகைப்படங்களை பெங்களூரு புறநகர் மாவட்ட போலீசாருக்கு இலகல் போலீசார் அனுப்பி வைத்திருந்தனர். அந்த அந்த புகைப்படங்களை வைத்து பார்க்கையில் ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்த உடலும் அந்த தலையும் ஒரே பெண்ணுக்கு உரியது தான் என்பது தெரியவந்தது.

கள்ளக்காதலன் கைது

  இதற்கிடையில் துமகூரு மாவட்டம் கிரேஹள்ளி கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் தனது தாய் லிங்கம்மாவை (வயது 67) காணவில்லை என்று ஒரு புகார் அளித்திருந்தார். இது பற்றிய தகவலும் ரெயில்வே போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து சதீசை வரவழைத்து அந்த புகைப்படங்களை காட்டினர். அப்போது அவர் கொலையாகி இருப்பது தனது தாய் லிங்கம்மா என்பதை அவர் உறுதி செய்தார்.

  அதைத்தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க பெங்களூரு புறநகர் மாவட்ட ரெயில்வே போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் லிங்கம்மாவை கொலை செய்ததாக அவரது மருமகள் லதாவின் கள்ளக்காதலன் பாலச்சந்திரா என்பவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

மருமகள் தலைமறைவு

  லதாவின் கணவர் இறந்துவிட்டார். அதன் பிறகு தனது மாமியார் லிங்கம்மாவுடன் லதா வசித்துள்ளார். அவருக்கும் பாலச்சந்திராவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த லிங்கம்மா தனது மருமகள் லதாவை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லதா, லிங்கம்மாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதுபற்றி கள்ளக்காதலன் பாலச்சந்திராவிடம் கூறியுள்ளார். அவரும் லிங்கம்மாவை கொலை செய்ய சம்மதித்துள்ளார்.

  பின்னர் கடந்த 20-ம் தேதி லிங்கம்மாவை கொலை செய்து அவரது உடலை ரயில்வே தண்டவாளத்தில் பாலச்சந்திரா வீசியுள்ளார். இதில் அவரது தலை துண்டாகி உடல் பாகங்கள் சிதறியுள்ளது.
  பின்னர் லிங்கம்மாவின் தலையை மட்டும் ஒரு கவரில் போட்டு அதனை பாகல்கோட்டைக்கு சென்ற லாரியில் பாலச்சந்திரா போட்டுள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் லிங்கம்மாவை அடையாளம் கண்டு கொள்ள முடியாது என்றும், போலீசில் சிக்கிக்கொள்ள மாட்டோம் என்றும் லதாவும், பாலச்சந்திராவும் கருதியுள்ளனர்.

  ஆனால் போலீசார் துரிதமாக செயல்பட்டு பாலச்சந்திராவை கைது செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த லதா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்