கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

நீர்வரத்து அதிகரிப்பால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. அந்த முழுகொள்ளளவை எட்ட இன்னும் 12 அடியே பாக்கி உள்ளது.

Update: 2021-07-26 21:27 GMT
மைசூரு:
  
கிடுகிடுவென உயர்வு

  கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் அணைகள், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

  இந்த நிலையில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

12 அடியே பாக்கி

  124.80 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 6 மணி நிலவரப்படி 112 அடியாக இருந்தது. இந்த அணை நிரம்ப இன்னும் 12 அடிகளே பாக்கியாக உள்ளது. மழை தொடர்ந்து பெய்தால் இன்னும் 15 நாட்களில் இந்த அணை நிரம்பி விடும் என்று நீர்பாசனத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

  நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 64 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து 9 ஆயிரத்து 950 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

தண்ணீர் வெளியேற்றம்

  இதுபோல மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் உள்ளது கபினி அணை. கடல்மட்டத்தில் இருந்து 2284.80 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் 2281.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 29 ஆயிரத்து 637 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. 

அணையில் இருந்து வினாடிக்கு 26 ஆயிரத்து 633 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதாவது 2 அணைகளில் இருந்தும் 36 ஆயிரத்து 583 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்