காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

குஷால்நகர் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலியானார்.

Update: 2021-07-26 21:58 GMT
குடகு:
  
தொடர் அட்டகாசம்

  குடகு மாவட்டத்தில் உள்ள காபி தோட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்துவதும், விளைப்பயிர்களை நாசமாக்குவதும் அடிக்கடி நிகழ்கிறது. மாவட்டத்தில் நடப்பு ஆண்டு மட்டும் யானை தாக்குதலுக்கு 15-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

  இதனால், யானைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால்,யானைகள் காபி தோடங்களில் நுழைவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

காட்டு யானை தாக்கியது

  இந்த நிலையில் குடகு மாவட்டம், குஷால்நகர் தாலுகா சஞ்சராயப்பட்டணா அருகே காபி தோட்டம் உள்ளது. இங்கு வால்கூர் கிராமத்தை சேர்ந்த உல்லாஸ்(வயது 60) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது திடீரென்று காபி தோட்டத்திற்குள் ஒரு காட்டு யானை புகுந்தது.

  இதை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் அவரை காட்டு யானை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. மேலும் காலில் போட்டு மிதித்தது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதற்கிடைேய அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு சக தொழிலாளிகள் விரைந்து வந்தனர்.

பரிதாப சாவு

  பின்னர் யானையை அவர்கள் கற்கள் வீசி விரட்டியடித்தனர். பின்னர் படுகாயமடைந்த உல்லாசை மீட்டு சிகிச்சைக்காக குஷால்நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதுகுறித்து குஷால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வனத்துறையினரும், காட்டு யானை தாக்கி பலியான உல்லாசின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அரசு நிவாரண நிதி ெபற்றுத்தருவதாக உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்