நாகை மாவட்டத்தில் சோலார் பம்பு செட்டு அமைத்து விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் வருமானம் ஈட்டலாம்

நாகை மாவட்டத்தில் சோலார் பம்பு செட்டு அமைத்து விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் வருமானம் ஈட்டலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-07-27 11:37 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசால் 60 சதவீத மானியத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தால் இயங்கும் சோலார் பம்பு செட் (11 கிலோ வாட் வரை) அமைத்து தரப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு மின்வாரியத்தால் வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பு இருக்க வேண்டும். மின் இணைப்பு எந்த வகையிலும் துண்டிக்கப்படமாட்டாது.

இலவச மின்சாரமும் ரத்து செய்யப்படமாட்டாது. இலவச மின்சாரத்தைப் பயன்படுத்துவதோடு, சூரிய ஒளி மின்சாரத்தையும் பயன்படுத்துவதால், மின்சாரம் சிக்கனம் செய்யப்படுகிறது. அதிக பரப்பில் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாகிறது.

விவசாயிகள் சூரிய ஒளி மின்சாரம் உபயோகப்படுத்தியது போக, மீதமுள்ள சூரிய ஒளி மின்சாரமானது கணக்கிடப்பட்டு, அதனை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து, அதற்கான தொகை மாதந்தோறும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம். அரசு மானியம் 60 சதவீதம் போக, 40 சதவீத தொகையினை விவசாயிகள் பங்கு தொகையாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த முடியாத பட்சத்தில் அத்தொகைக்கு குறைந்த வட்டியில் வங்கி கடன் பெற்று தர அரசு ஏற்பாடு செய்யும். இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர், திட்டம் தொடர்பான விருப்ப கடிதம், மின் இணைப்பு கணக்கு அட்டை, மோட்டார் திறன் உள்ளிட்டவை விவரங்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், எரிசக்தி மேம்பாட்டு முகமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ngp@teda.in என்ற இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம். விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சூரிய ஒளி மின்சார அமைப்பினை ஏற்படுத்தி பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்