திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-27 12:58 GMT
திண்டுக்கல்:

தம்பதி தீக்குளிக்க முயற்சி 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று கணவன், மனைவி வந்தனர். பின்னர் அவர்கள், திடீரென தங்களுடைய உடலில் மண்எண்ணெயை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அதை பார்த்த போலீசார் துரிதமாக செயல்பட்டு 2 பேரையும் தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். 

மேலும் அவர்கள் மீது போலீசார் தண்ணீரை ஊற்றினர். அதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் (வயது 56), அவருடைய மனைவி பவுன்தாய் (48) என்பது தெரியவந்தது.

இவர்கள் அந்த பகுதியில் ரூ.3 லட்சம் கொடுத்து ஒரு வீட்டில் ஒத்திக்கு குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஒப்பந்த காலம் முடியும் முன்பே உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி வலியுறுத்தி உள்ளார்.

பணம் தராததால் விரக்தி

இதனால் முருகன் தம்பதியினர் ரூ.3 லட்சத்தை திரும்ப கேட்டுள்ளனர். ஆனால், வீட்டின் உரிமையாளர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த தம்பதி, கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்து உள்ளனர்.

அப்போது அவர்கள், விரக்தியில் தீக்குளிக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரையும் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

பின்னர் அவர்களுக்கு அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
--------

மேலும் செய்திகள்