குப்பைகளை எரிப்பதால் சுகாதாரக்கேடு

ஒட்டன்சத்திரம் அருகே குப்பைகளை எரிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-07-27 13:11 GMT
ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள் மட்டுமின்றி பொதுமக்கள் அதிகம் கூடுகிற மார்க்கெட்டுகள், மருத்துவமனைகள், பஸ்நிலையம், வர்த்தக நிறுவனங்களும் உள்ளன.

 நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தினமும் பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து, ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் தாசில்தார் அலுவலகம் அருகே கொட்டுகின்றனர். இந்த குப்பைகளில் மருத்துவ கழிவுகளும் அதிக அளவில் உள்ளன.

இந்தநிலையில் மலைபோல குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைத்து கொளுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது. 

மேலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு சுவாசக்கோளாறு, நுரையீரல் பாதிப்பு ஆகியவை ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் புகைமூட்டத்தினால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

 எனவே குப்பைகளுக்கு தீ வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்