தஞ்சை கலெக்டரின் பெயரை பயன்படுத்தி பணம் பறிக்க முயன்ற பெண் கைது - கணவருக்கு போலீசார் வலைவீச்சு

தஞ்சை கலெக்டரின் பெயரை பயன்படுத்தி பணம் பறிக்க முயன்ற பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரது கணவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-07-27 15:21 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை சேர்ந்த பிரபல மருத்துவமனைகள் மற்றும் துணிக்கடை உரிமையாளர்கள் சிலரை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தன்னை தஞ்சை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். அதன் பின்னர் அவர், ஒரு சில அரசு திட்டங்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும், மேற்படி திட்டத்திற்காக பணம் அனுப்புமாறும் கூறி மருத்துவமனைகள் மற்றும் துணிக்கடை உரிமையாளர்களுக்கு, வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை அனுப்பினார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த தகவலைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கலெக்டர். இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

மேற்படி நபர்களிடம் இருந்து பெறப்பட்ட 2 செல்போன் எண்கள், ஒரு வங்கி கணக்கு எண் ஆகியவற்றை போலீசாரிடம் கொடுத்த மாவட்ட கலெக்டர், இதுகுறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

அவரது புகாரின் பேரில், தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பூர்வாங்க விசாரணையில் அது கோவை ஓண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவரின் வங்கிக்கணக்கு என்பதும், அதே பகுதியில் உள்ள வங்கி கிளையை சேர்ந்தது என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து குற்றவாளியைப்பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, அந்த தனிப்படை போலீசார் கோவைக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரிடம் பிடிபட்ட பெண் அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் ரெஜினா என்பதும்,, மோசடி கும்பலால் அவர் இந்த சம்பவத்தில் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது.

போலீசாரின் தொடர் புலன் விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருவள்ளுர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த சந்தானம் என்கிற சந்தான பாரதி(65) மற்றும் அவரது மனைவி ரீட்டா பபியா(50) என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து ரீட்டா பபியாவை தஞ்சை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

எனினும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அவரது கணவர் சந்தான பாரதியை பிடிக்க முடியவில்லை. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த தம்பதியினர் இதேபோல் பிற மாவட்ட கலெக்டர்கள் பெயரையும் பயன்படுத்தி மோசடி செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்