நாமக்கல்லில் பரிதாபம்: குதிரை சவாரி செய்த 7 வயது சிறுமி தவறி விழுந்து சாவு-போலீசார் விசாரணை

நாமக்கல்லில் குதிரையில் சவாரி செய்த 7 வயது சிறுமி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தாள்.

Update: 2021-07-27 18:33 GMT
நாமக்கல்:
குதிரை சவாரி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காக்காவேரி பகுதியை சேர்ந்தவர் ஜான். இவருடைய சகோதரர் டேவிட். இவர்கள் 2 பேரும் நாமக்கல்லில் திருச்செங்கோடு சாலையில் குதிரை ஏற்ற பயிற்சி பள்ளியை நடத்தி வருகின்றனர். சுமார் 10 குதிரைகளுடன் இந்த பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஜான் பயிற்றுனராகவும் இருந்து வருகிறார்.
நேற்று காலையில் பயிற்சி முடிந்த பிறகு, ஒரு குதிரையை மேய்ச்சலுக்கு ஜான் கொண்டு சென்றார். அந்த குதிரையில் அவருடைய 7 வயது மகள் நான்சி ஏறி பயணம் செய்தாள். அப்போது திடீரென குதிரை மிரண்டு ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் குதிரையில் சவாரி செய்த நான்சி தவறி விழுந்தாள். இதில் அவளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சிறுமி பரிதாப சாவு
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜான், சிறுமியை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் சிறுமி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நான்சி, பலனின்றி பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
குதிரை சவாரி செய்த சிறுமி தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்