அரூர் அருகே கிராமமக்கள் சாலை மறியல்

அரூர் அருகே சாலை வசதி செய்து தரக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-27 19:40 GMT
அரூர்:

சாலை மறியல்
அரூர் அருகே உள்ள கோணம்பட்டி கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இந்த கிராமத்திற்கு புறாக்கல் உட்டையில் இருந்து செல்லும் 1 கி.மீ. சாலையில், கடந்த, 2005-ம் ஆண்டு பாதி தூரத்திற்கு தார்சாலை அமைக்கப்பட்டது. மீதமுள்ள தூரத்திற்கு தார்சாலை அமைக்கப்படவில்லை. இந்த நிலையில், சிலர் தங்கள் பட்டா நிலத்தில் சாலை உள்ளதாகவும், அதனால், வாகனங்களில் யாரும் வரக்கூடாது என கூறியதாக கூறப்படுகிறது. 
இது குறித்து கிராமமக்கள் தாசில்தார், கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு கோரிக்கை மனு அனுப்பினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று சாலை வசதி செய்து தர கோரி அரூர்-தீர்த்தமலை சாலையில், கோணம்பட்டி பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 
பேச்சுவார்த்தை
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரூர் தாசில்தார் கனிமொழி, போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தார்சாலை அமைத்து தர உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்