போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வில் போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்த வாலிபர் கைது

தர்மபுரியில் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வில் போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-27 19:40 GMT
தர்மபுரி:

உடற்தகுதி தேர்வு
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.
அப்போது தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள சின்னமுருக்கன்பட்டியை சேர்ந்த சசிகுமார் (வயது 21) என்ற வாலிபர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்றார். அப்போது அவருக்கான ஓ.எம்.ஆர். சான்று சரிபார்ப்பு பிரிவில் இருந்து வரவில்லை. இதனால் அவர் மீது உடற்தகுதி தேர்வை நடத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
போலி ஆவணம்
இதையடுத்து அவர் வைத்திருந்த ஆவணங்களை சரிபார்த்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது பி.எஸ்சி. பட்டதாரியான சசிகுமார் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெறவில்லை என்பது தெரியவந்தது.
அவர் தன்னுடன் பயிற்சி மையத்தில் படித்த பிரகாஷ் என்பவருக்கு வந்த உடற்தகுதி தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை பெற்று போலியான அழைப்பு கடித ஆவணத்தை தயாரித்து அதில் தனது புகைப்படத்தை ஒட்டி தனது பெயர் மற்றும் கையெழுத்தை மாற்றி எடுத்து வந்திருப்பது தெரிந்தது. உடற்தகுதி தேர்வில் ஏற்கனவே பங்கேற்ற பிரகாஷ் தேர்வு செய்யப்படாத நிலையில், போலி ஆவணம் மூலம் சசிகுமார் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.
கைது
இதுதொடர்பாக உடற்தகுதி தேர்வு தொடர்பான பணியில் ஈடுபட்ட அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் டவுன் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்