இடத்தை கையகப்படுத்த வந்த அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகை

இடத்தை கையகப்படுத்த வந்த அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-07-27 20:27 GMT
வி.கைகாட்டி:

இடத்தை கையகப்படுத்த...
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த விளாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரத்தூர் சாலையில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள், அரசு வழங்கிய இடத்தில் வசித்து வருகின்றனர். இதில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். அவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய தாசில்தார் திருமாறன் பட்டா வழங்கினார். அந்த பகுதியில் இருளர் சமுதாய மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2-ந் தேதி இருளர் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை கையகப்படுத்த வந்த தாசில்தார் ராஜமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் அனுசுயாதேவி, தமிழரசன் மற்றும் நில அளவையர்கள் ஆகியோரை இருளர் சமுதாய மக்கள் விஷ பாட்டில்களுடன் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் இந்த நிலம் தொடர்பாக இருளர் சமுதாய மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
முற்றுகை
இந்நிலையில் நேற்று, இருளர் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட அந்த இடத்தை கையகப்படுத்தி, அளவீடு கல் ஊன்றுவதற்கு அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீசாருடன் தாசில்தார் ராஜமூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் வந்தனர். அவர்களை இருளர் சமுதாய மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் எப்படி அளவீடு கல் ஊன்றலாம் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அதிகாரிகள், பொக்லைன் எந்திரம் மூலம் அளவீடு கல்லை ஊன்றிச் சென்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்