நிலத்தகராறில் 3-வது மனைவியை குத்திக் கொலை செய்த விவசாயி கைது

நிலத்தகராறில் 3-வது மனைவியை குத்திக் கொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-07-27 20:28 GMT
தோகைமலை
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள எட்டம்பட்டி என்ற சின்ன கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பெரியதம்பி என்கிற ரெங்கசாமி (வயது 72). இவருக்கு 2 மனைவிகள். அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டனர். மூன்றாவதாக சீதாலட்சுமி என்ற குஞ்சம்மாளை(54) திருமணம் செய்து கொண்டு சின்னகவுண்டம்பட்டி அருகே உள்ள அவரது தோட்டத்தில் குடிசை அமைத்து வசித்து வந்தார். 3 மனைவிகள் மூலம் ரெங்கசாமிக்கு 3 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.  இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளாக குஞ்சம்மாளுக்கும் ரெங்கசாமிக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. தனக்கு சொந்தமான 18.5 ஏக்கர் விவசாய நிலத்தில் 6 ஏக்கர் நிலத்தை முதல் மனைவிக்கு ஏற்கனவே எழுதி கொடுத்த ரெங்கசாமி மீதமுள்ள நிலத்தை குளித்தலையில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்து ரூ.9.5 லட்சம் வாங்கியுள்ளார்.
போதிய அளவு விவசாயம் இல்லாததால் வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் ரெங்கசாமி அவதிப்பட்டு வந்தார். எப்படியாவது வங்கியில் அடமானம் வைத்த நிலத்தை மீட்க வேண்டும் என்று நினைத்த குஞ்சம்மாள் அக்காள் மகன் வீரப்பனிடம் பணத்தை கடனாக பெற்று நிலத்தை மீட்டுள்ளார். பின்னர் மீட்கப்பட்ட அந்த நிலத்தை தனது வாரிசுகளுக்கும் 2-வது மனைவியின் வாரிசுகளுக்கும் எழுதிக் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் தனது பெயரில் ஒரு சென்ட் நிலம் கூட இல்லாமல் அனைத்தையும் எழுதி வாங்கிக் கொண்டீர்களே என குஞ்சம்மாளிடம் தகராறு செய்த ரெங்கசாமி வீட்டை விட்டு வெளியேறினார்.  இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு 1 மணி அளவில் வந்து கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குஞ்சம்மாளை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தார்.இதுகுறித்து புகாரின்பேரில் தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன்  வழக்குப்பதிவு செய்து விவசாயி ரெங்கசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்