போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 வாகனங்கள் பறிமுதல்

பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

Update: 2021-07-28 20:30 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றி செல்வதாக கலெக்டர் அலுவலகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவின் உத்தரவின்பேரில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிசாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பாடாலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும் தகுதி சான்று புதுப்பிக்காததால் 2 சரக்கு வாகனங்களும், தகுதி சான்று புதுப்பிக்காதது போன்ற காரணங்களுக்காக ஒரு ஆம்னி வேனும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல மங்களமேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 2 கனரக சரக்கு வாகனங்களும் 2 இலகு ரக வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிச் சென்றது தகுதிச் சான்று ஓட்டுனர் உரிமம் காப்பு சான்று புகை சான்று ஆகியவை இல்லாத காரணத்தினால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த 7 வாகனங்களுக்கு அபராதமாக ரூ.1 லட்சம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பெரம்பலூர் சுற்று வட்டார பகுதிகளில் 7 பொக்லைன் எந்திரங்கள் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டு வந்தது வட்டார போக்குவரத்து அலுவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அந்த பொக்லைன் எந்திரங்களின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். அதிக பாரம் ஏற்றி சென்ற 5 கனரக வாகனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்