நாகை கலெக்டர் அலுவலகத்தில் ரூ.31 லட்சத்தில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி சாதனம் திறப்பு

நாகை கலெக்டர் அலுவலகத்தில் ரூ.31 லட்சத்தில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி சாதனம் திறக்கப்பட்டது.

Update: 2021-07-29 12:55 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 60 கிலோ வாட் கொண்ட சூரிய மின்சக்தி சாதனம் (சோலார்) அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் சூரிய மின்சக்தி சாதனத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ.31 லட்சம் மதிப்பிலான 60 கிலோ வாட் கொண்ட சூரிய மின்சக்தி சாதனம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சூரிய மின்சக்தி அமைப்பின் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைத்து மின்சாதனங்களும், இயங்குவது மட்டுமல்லாமல் மீதமுள்ள மின்சாரமானது மின்வாரியத்திற்கு அனுப்பி சேமிக்கப்படும்.

மாவட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டினை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சூரிய மின்சக்தியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாதனங்களை மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் மரபுசாரா எரிசக்தியினை மேம்படுத்தும் திட்டங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த சூரிய சக்தி அமைப்பினை ஏற்படுத்தும் அரசு அலுவலகங்களில் மின்சாரமானது சேமிக்கப்படுவதோடு மின்வாரிய கட்டணம் குறைகிறது.

இத்திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 60 கிலோ வாட், மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் 40 கிலோ வாட், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் 90 கிலோ வாட் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 20 கிலோ வாட், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 12 கிலோ வாட் மற்றும் செம்பனார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் 15 கிலோ வாட் என அந்தந்த அலுவலகங்களில் முன்மாதிரியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) குணசேகரன், எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மாவட்ட உதவி பொறியாளர் ராஜராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்