வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மாமூல் கேட்டு வியாபாரிக்கு கத்தி வெட்டு

மாமூல் கேட்டு வியாபாரிக்கு கத்தி வெட்டு

Update: 2021-07-29 13:59 GMT
வேலூர்

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பாலு (வயது 40). இவர் நேதாஜி மார்க்கெட்டில் மொத்த விற்பனை காய்கறிகடை வைத்துள்ளார். வழக்கம் போல் பாலு நேற்று அதிகாலை 3 மணியளவில் மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது 3 பேர் அவரை மடக்கி வசூர்ராஜாவின் கூட்டாளிகள் என்று கூறி மாமூல் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால் கோபம் அடைந்த 3 பேரும் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். 

அப்போது 3 பேரில் ஒருவன் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலுவின் தலையில் வெட்டினான். இதில், பலத்த காயமடைந்த அவர் அவர்களிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். 3 பேரும் அவரை விரட்டி சென்றனர். இதைக்கண்ட வியாபாரிகள் பாலுவை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வியாபாரிகளை கண்டதும் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து பாலு அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நேதாஜி மார்க்கெட் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், பதிவாகி இருந்த வசூர்ராஜா கூட்டாளிகள் 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்