உலக புலிகள் தினம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

உலக புலிகள் தின கொண்டாட்டத்தையொட்டி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை புலிகள் காப்பக துணை இயக்குனர் வழங்கினார்.

Update: 2021-07-29 16:14 GMT
பொள்ளாச்சி
உலக புலிகள் தின கொண்டாட்டத்தையொட்டி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை புலிகள் காப்பக துணை இயக்குனர் வழங்கினார். 

பல்வேறு போட்டிகள்

உலக புலிகள் தினத்தையொட்டி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டம் சார்பில் பள்ளி மாணவ-மாணவி களுக்கு இணையதளம் மூலம் போட்டிகள் நடத்தப்பட்டது. 

முகத்தில் வர்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல், கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக மாணவ-மாணவிகள் தங்களது படைப்புகளை வீடியோ பதிவு செய்து மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த போட்டிகளில் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை தாலுகா பகுதிகளில் உள்ள 35 பள்ளிகளை சேர்ந்த 201 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினர். 

மாணவர்களுக்கு பரிசு 

இதில் பரிசுகள் பெறுவதற்கு 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து புலிகள் காப்பக கள இயக்குனர் (பொறுப்பு) அன்வர்தீன் அறிவுறுத்தலின் பேரில் பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தில்  பரிசளிப்பு விழா நடைபெற்றது. 

விழாவிற்கு துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயங்கள் மற்றும் புலியின் உருவம் கொண்ட முகக்கவசத்தை வழங்கினார். 

இதில் கள இயக்குனரின் நேர்முக உதவியாளர் முரளிதரன், உதவி வன பாதுகாவலர் (தலைமையிடம்) பிரசாந்த், அட்டகட்டி பயிற்சி மைய உதவி வன பாதுகாவலர் செல்வம், கண்காணிப்பாளர்கள் சரஸ்வதி, ஜெயராஜ், வனச்சரகர் புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வால்பாறை

வால்பாறை பகுதியில் அனைத்து போட்டிகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. 

இதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி மானாம்பள்ளி வனச்சரக அலுவலகத்தில் நடந்தது. 

இதில் வனச்சரக அதிகாரிகள் மணிகண்டன், ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்கள்.

மேலும் செய்திகள்