வர்த்தக சங்கத்தினர் கடைகள் அடைப்பு

பரவை காய்கறி சந்தையை மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றக்கோரி வர்த்தக சங்கத்தினர் கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-29 16:25 GMT
வேளாங்கண்ணி:
பரவை காய்கறி சந்தையை மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றக்கோரி வர்த்தக சங்கத்தினர் கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரவை காய்கறி சந்தை
வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூர் ஊராட்சியில் உள்ள பரவை கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தினசரி காய்கறி சந்தை இயங்கி வந்தது. வேளாங்கண்ணி, பிரதாபராமபுரம், காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைகாரனிருப்பு, வெள்ளப்பள்ளம், புதுப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் மாங்காய், தேங்காய், காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவைகளை இங்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.
இதுதவிர இந்த பகுதியில் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள், மீன் கடைகள் என உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதனால் இங்கு தினந்தோறும் பல லட்சம் ரூபாய் அளவில் வர்த்தகம் நடைபெறும். இந்த வியாபாரத்தை கொண்டு அறநிலையத்துறைக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வருமானம் கிடைக்கும். இதிலிருந்து தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சிக்கு ரூ.15 சதவீதம் வரி செலுத்தி வந்தனர்.
இடமாற்றம்
இந்த நிலையில் கொரோனா வைரஸ் முதல் அலையின் போது தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகள் பொது வெளிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பரவை சந்தை தற்காலிகமாக அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அரசு தளர்வுகள் அறிவித்தவுடன் சந்தைகள் மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் பரவை சந்தை மட்டும் இடமாற்றம் செய்யப்படவில்லை.
எனவே தனியாருக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் சந்தையை மீண்டும் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்துக்கு மாற்றக்கோரி வியாபாரிகள் பலமுறை மாவட்ட நிர்வாகம், அறநிலையத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
உண்ணாவிரதம்
இந்த நிலையில் பரவை சந்தையை பழைய இடத்திற்கு மாற்றக்கோரி பரவை வர்த்தக நல சங்கம் சார்பில் நேற்று 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைக்கப்பட்டது. இதை தொடர்ந்து பரவை வர்த்தக சங்க தலைவர் கோடிக்குமார் தமிழ்வேல் தலைமையில் வர்த்தக சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியாருக்கு சொந்தமான இடத்தில் பரவை சந்தை இயங்குவதால் அறநிலையத்துறைக்கும், தெற்கு பொய்கைநல்லலூர் ஊராட்சிக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் நலன் கருதி அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்திலேயேமீண்டும் பரவை காய்கறி சந்தை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக சங்கத்தினர் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க வேளாங்கண்ணி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்