கோவையில் போட்டிபோட்டு செல்லும் பஸ்களால் விபத்துகள் அதிகரிப்பு

கோவையில் அதிவேகமாக போட்டி போட்டு செல்லும் பஸ்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

Update: 2021-07-29 17:29 GMT
கோவை

கோவையில் அதிவேகமாக போட்டி போட்டு செல்லும் பஸ்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிவேகமாக செல்லும் பஸ்கள்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக பஸ்கள் இயக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தினந்தோறும் அரசு மற்றும் தனியார் பஸ்களால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் வாரத்திற்கு 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

விபத்துகள்

கோவை மாவட்டம் புறநகர் பகுதியான சூலூரில் கடந்த வாரத்தில் பஸ்சில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் கருமத்தம்பட்டி, சூலூர், செட்டிபாளையம் போலீஸ் நிலையங்களில் தொடர்ந்து விபத்து வழக்குகள் பதிவாகி கொண்டே வருகிறது.

இதற்கிடையில் நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இடையே போட்டி போட்டு செல்வதில் ஒன்றுக்கொன்று உரசியதால் பிரச்சினை ஏற்பட்டு பஸ்களை ரோட்டில் நிறுத்தி, பஸ் டிரைவர்கள், நடத்துனர்கள் தகராறில் ஈடுபட்டனர். 

இதனால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்தனர். போலீசார் விரைந்து வந்து இரு டிரைவர்கள் மீது எச்சரிக்கை விடுத்த பின்னர் கலைந்து சென்றனர்.

கோவை மாவட்டத்தில் அதிக தூரம் பயணம் செய்யக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலம் தான் இந்த விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

போட்டிபோட்டு செல்கிறார்கள்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
அரசு பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. தனியார் பஸ்கள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படுகிறது. 

மேலும் நேர பிரச்சினை காரணமாக அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் கோவை நகருக்குள் போட்டி போட்டுச் செல்கிறார்கள் இதனாலும் விபத்துகள் அதிகமாக நடைபெறுகிறது. எனவே இதனை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்