வையம்பட்டி அருகே கிணற்றில் தத்தளித்த சிறுமியை காப்பாற்றிய 8 வயது சிறுவன் நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டிய கலெக்டர்

வையம்பட்டி அருகே கிணற்றில் தத்தளித்த சிறுமியை காப்பாற்றிய 8 வயது சிறுவனை நேரில் அழைத்து பரிசு வழங்கி கலெக்டர் பாராட்டினார்.

Update: 2021-07-30 00:06 GMT
வையம்பட்டி, 

வையம்பட்டி அருகே கிணற்றில் தத்தளித்த சிறுமியை காப்பாற்றிய 8 வயது சிறுவனை நேரில் அழைத்து பரிசு வழங்கி கலெக்டர் பாராட்டினார்.

சிறுமியை காப்பாற்றிய சிறுவன்

திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த கே.புதுக்கோட்டை அருகே உள்ள துலுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி குணா (வயது 29). இவர்களது மகள் லித்திகா (8). நேற்று முன்தினம் கிணற்றில் குளிக்கச்சென்ற போது எதிர்பாராத விதமாக தாய், மகள் இருவரும் தவறி கிணற்றில் விழுந்து தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு சத்தமிட்டனர்.

இதைப்பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் 8 வயது மகன் லோஹித் உயிரை துச்சமென நினைத்து கிணற்றில் குதித்து தாய்,  மகள் இருவரையும் காப்பாற்றப்போராடினான். ஆனால் சிறுவன் என்பதால் 8 வயது சிறுமியான லித்திகாவை மட்டுமே அவனால் காப்பாற்ற முடிந்தது. நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுமியை காப்பாற்றி மேலே கொண்டு வந்தார்.

பாராட்டிய கலெக்டர்

பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினரும் விரைந்து வந்தனர். இருப்பினும் குணாவை இறந்த நிலையில் தான் மீட்க முடிந்தது. இந்த சம்பவம் பற்றி வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் 8 வயதே ஆன சிறுவனான லோஹித்தின் வீரதீர செயல் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்ததுடன் அனைவரும் பாராட்டினர். 

மேலும் இதுபற்றிய தகவல் அறிந்த திருச்சி கலெக்டர் எஸ்.சிவராசு சிறுவனை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார். அத்துடன் சிறுவனின் துணிச்சலை பாராட்டி ரூ.5 ஆயிரம் காசோலையும் வழங்கினார். இதே போல் சிறுவனின் செயலை மணப்பாறை எம்.எல்.ஏ. அப்துல் சமதுவும் பாராட்டினார்.

மேலும் செய்திகள்